செங்கல்பட்டு: மேடவாக்கம் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
|மேடவாக்கம் அரசு பள்ளியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
செங்கல்பட்டு,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் ரூ.1.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 'நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் ரூ.1.22 கோடி செலவில் மெட்ராஸ் ரவுண் டேபிள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடம், சிறிய நூலகம், சிறிய ஆய்வு கட்டிடம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண், பேராசிரியர் பள்ளிக்கல்வி மேம்பாட்டுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்து பள்ளிக்கல்வித்துறை இன்றைக்கு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வி துறையில் அதிக அளவில் தன்னார்வலர்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்.
அந்த வகையில் மேடவாக்கம் அரசு பள்ளியில் ரூ.1.22 கோடி செலவில் எட்டு வகுப்பறைகளும், ஒரு நூலகமும் கொண்ட ஒரு கட்டிடம் ஒன்று, ரூ.80 லட்சம் செலவில் மெட்ராஸ் ரவுண் டேபிள் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் தந்து, மீதம் இருக்கின்ற ரூ.42 லட்சம் அரசு தந்து கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளினை ஒட்டி இது ஒரு அரசு நிகழ்வாகவும், இக்கட்டிடத்தை திறந்து வைத்து மகிழ்ச்சி அடையும் நாளாகவும் இது இருந்து வருகிறது.
பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது என முதல்-அமைச்சர் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சென்னையை பொருத்தவரை அக்டோபர் மாதம் 14-ந்தேதி பெய்யத் தொடங்கிய வடகிழக்கு பருவமழைக்காகவே, சென்னையின் பல்வேறு இடங்களில் ஏறத்தாழ 1,800-க்கும் மேற்பட்ட 100HP போன்ற பல்வேறு மோட்டார்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரும், துணை முதலமைச்சரும் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை அந்த மோட்டார்களை எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்த வகையில் 2 செ.மீ., 3 செ.மீ., என்று பெய்கின்ற மழை கடந்த வாரம் ஒரே நாளில் பெருங்குடியில் 8 செ.மீ. அளவுக்கு கூட பெய்தது. உடனடியாக எங்கேயும் தண்ணீர் நிற்காத வகையில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. அந்த வகையில் இன்று புதிய முயற்சிகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேளச்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு 1.60 மில்லியன் கன அடி அளவிற்கு நீர்நிலைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் 160 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 4.60 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் தேக்கும் அளவிற்கு நான்கு நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் டெல்டா பகுதிகளாக இருந்தாலும், சென்னைப் பகுதியாக இருந்தாலும் மழை வெள்ளம் பாதிப்புகள் இல்லாத வகையில் மக்களைக் காப்பதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார்."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.