< Back
மாநில செய்திகள்
டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
மாநில செய்திகள்

டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
2 Dec 2024 6:45 PM IST

டிசம்பரில் தென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் ஏமாற்றத்தை கொடுத்தது. தமிழகத்தில் ஆங்காங்கே பெய்த மழையும் மிதமான மழை முதல் கனமழை மழை அளவிலேயே இருந்தது.

இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று, கடந்த 26-ந் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. புயலாக மாறாமல் போக்கு காட்டி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29-ந் தேதி மதியம் புயலாக மாறியது. அதற்கு 'பெஞ்சல்' என்று பெயரிடப்பட்டது.

பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதைபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதி கனமழை பெய்தது.

இந்த நிலையில், நவம்பரில் அதி கனமழை கொட்டிய நிலையில், டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது டிசம்பரில் இயல்பை விட 31% அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில மாவட்டங்களில் இயல்பைவிட 75% அதிகமாக மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்