சென்னையில் வீடு புகுந்து செயின் பறிப்பு; உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபர் ரெயில் நிலையத்தில் கைது
|செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரெயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை,
சென்னை தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் பிரியங்காவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரை நிலைகுலையச் செய்துள்ளார். பின்னர் பிரியங்கா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அந்த நபர் தப்பியோடியுள்ளார்.
இது குறித்து பிரியங்கா உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தபோது, செயின் பறிப்பில் ஈடுபட்டது பிரியங்கா வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராம் மிலான் என்பது உறுதியானது. இதனிடையே ராம் மிலான் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த ராம் மிலானை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தனது மனைவி தங்க செயின் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ராம் மிலான் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். செயின் பறிப்பு குறித்து புகார் வந்ததும் விரைந்து செயல்பட்ட போலீசார் 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.