
கோப்புப்படம்
மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது - முத்தரசன் பேட்டி

நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெஞ்சல் புயலால் பாதித்த தமிழகம், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை. தங்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு நிதி கொடுக்க மாட்டோம் என மத்திய அரசு கூறுவது சர்வாதிகார செயலாகும். வாக்களிக்கும் மக்கள் எங்கள் கட்சிக்கும், நாங்கள் ஆதரவு அளிக்கும் கட்சிக்கும்தான் ஓட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாநிலங்களை வஞ்சிப்பேன் என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்.
தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்கள், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி இல்லாமல் போய்விடும். மும்மொழிக்கொள்கையை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்திற்கான 2,152 கோடி ரூபாய் நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். இதை எதிர்த்துத்தான் போராடுகிறோம்.
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி மற்றும் பயனாளிகள் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து விட்டது. 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழகத்திற்கு 2,208.74 கோடி ரூபாய் நிதியை 3 மாதங்களாக வழங்காமல் உள்ளது. கல்வி நிதி, பேரிடர் நிதி என எதையும் வழங்காமல் புறக்கணிப்பது நாட்டில் கலகத்தை தூண்டுவதாகும். ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய அரசு உள்ளது. மத்திய அரசு நிதியை தமிழக அரசு இலவசங்கள் வழங்க பயன்படுத்தியதாக கூறப்படும் தகவல் பொய்.
மத்திய அரசை தமிழக முதல்-அமைச்சர் தனிப்பட்ட முறையில் இல்லாமல், அரசியல் ரீதியாக எதிர்த்து போராடி வருகிறார். மத்திய அரசால், அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை குறைத்தால், மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தில் நிகழும் பாலியல் சம்பவங்கள் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.