< Back
மாநில செய்திகள்
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - ஜி.கே.வாசன்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - ஜி.கே.வாசன்

தினத்தந்தி
|
12 Nov 2024 7:58 PM IST

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

மத்திய அரசு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது நீடிக்கிறது. நேற்று முன் தினம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

குறிப்பாக நேற்று முன் தினம், இன்று இப்படி கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தமிழக மீனவர்களை மிகுந்த அச்சத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.

மத்திய அரசு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரையும், படகுகளையும் மீட்க வேண்டும். மேலும், மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்