அவிநாசி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - சீமான்
|அவிநாசி நகரம் முதல் அவிநாசி பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் செயல் கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகரம் முதல் அவிநாசி பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் (NH-381) 24-10-2024 அன்று முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் சுங்க வசூல் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
வசூல் செய்யப்படும் கட்டணக் கணக்கைக் குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்க வசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆகவே, NH-381 சாலைக்குச் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்காக வேலம்பட்டியில் சட்டவிரோதமாக நீர்நிலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை அகற்றக் கோரியும், சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தை திரும்பப்பெறக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக 23.10.2024 அன்று முதல் விவசாயிகள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் தொடர் காத்திருப்புப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவை அளிப்பதோடு, கோரிக்கை வெல்லும்வரை போராட்டக்களத்தில் தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் இவ்வறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.