< Back
மாநில செய்திகள்
ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம்: அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம்: அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
22 Nov 2024 1:18 PM IST

ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நல்வாழ்வு என்பது, மக்கள், விலங்குகள் மற்றும் சூழலியல் அமைப்புகளின் நல்வாழ்வை சமநிலைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த மற்றும் ஓரலகுக் கட்டமைப்பு என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன், பல்லுயிர்ப்பெருக்கத்துக்கு ஏற்படும் இழப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, பொது சுகாதாரம், கால்நடை மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைந்த நல்வாழ்வு மையம் வலியுறுத்துகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் முன்னோடியாக உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, வெப்பநிலை அதிகரிப்பு, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் பெருந்தொற்றுகள், நோய்க்கடத்திகள் வாயிலாகப் பரவும் நோய்கள், கடலோரப்பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட தனித்தன்மை வாய்ந்த பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்தச் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக, பழங்குடியினர் வாழும் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் அதிக இடர்பாடுகளை எதிர்கொள்ளும் பகுதிகள் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் சமூகத்தினரின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் முன்னெச்சரிக்கை வாய்ந்த அணுகுமுறை அவசியமாகிறது.

ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை உருவாக்கியிருப்பது, காலநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு, காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக்கொள்ளக்கூடிய வகையிலான ஒரு சுகாதார அமைப்பு முறையை உருவாக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் மக்கள் நலனுக்கான தேசிய திட்டத்தின் இலக்குகளை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தமிழ்நாட்டின் உறுதியான முயற்சிகளுடன் இணைப்பதன் வாயிலாக, நிலையான மற்றும் சம அளவிலான வளர்ச்சியை பேணுவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றும். இந்த மையம், காலநிலைச் சூழ்நிலைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஏற்படும் நோய்களின் தீவிரத்தன்மையை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுத்துவதற்கான மாதிரிகளை உருவாக்குவதற்கு செயல்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த மையத்திற்கு தலைமை வகிப்பார். தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர், உறுப்பினர் / செயலாளராகவும், தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் நிருவாக இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இதன் உறுப்பினர்களாவர்.

மேலும் இது, நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்களைக் கொண்ட ஒரு செயலகத்தின் உதவியுடன் செயல்படுவதாக அமையும். ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம், காலநிலை தூண்டலால் ஏற்படும் உடல்நல சவால்களைச் எதிர்கொள்வதற்கான ஒரு வலிமையான, முற்போக்கு சிந்தனை அணுகுமுறையாக அமையும்.

இது, ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளை எதிர்கொள்வதற்கு தமிழ்நாட்டினை மேலும் ஆயத்தப்படுத்தும், மீள்தன்மையை அதிகரிப்பதோடு, நிலையான சுகாதார ஏற்பாட்டு முறைகளை ஊக்குவிக்கும். புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கைகளை வளர்ப்பதன் வாயிலாக, இந்தியாவில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளுக்கு இந்த மையம் ஒரு முன்மாதிரியாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்