சட்டப்பேரவை நடவடிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நினைவூட்டுகிறது - கவர்னர்
|சட்டப்பேரவை நடவடிக்கைகள் தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நினைவூட்டுகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். கூட்டத்தொடரை முன்னிட்டு, சபாநாயகர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.
இதையடுத்து ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக சட்டசபை கூடியது. சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன.
தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், "மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் உட்பட தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் மீதான தனது மாறாத அன்பு, மரியாதை மற்றும் போற்றுதலை தமிழக கவர்னர் மீண்டும் வலியுறுத்துகிறார். "தமிழ் தாய் வாழ்த்து" என்ற தமிழ் மாநில பாடலின் புனிதத்தை தமிழக கவர்னர் எப்போதும் நிலைநாட்டி, ஒவ்வொரு நிகழ்விலும் பயபக்தியுடன் பாடுகிறார். உலகின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற மொழியான தமிழ், எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது, இந்த உணர்வை கவர்னர் முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார். மாநிலத்திற்குள்ளும் தேசிய அளவிலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதற்கு கவர்னர் ஒவ்வொரு வகையிலும் ஆதரவு அளித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை மதித்து, அரசியல் சட்டக் கடமைகளைப் பின்பற்றுவது கவர்னரின் கடமை. தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமை, அது தேசியப் பெருமைக்குரிய விஷயமாகும். நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநில சட்டசபையிலும் கவர்னர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. தேசிய கீதக் குறியீட்டின்படியும் இது கட்டாயம். முன்கூட்டியே பலமுறை நினைவூட்டல்களை தெரிவித்த பிறகும், இந்தக் கோரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
இன்று (06.01.2025), கவர்னர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருந்தபோது, அவையின் அரசியலமைப்பு கடமைகளை கவர்னர் மரியாதையுடன் நினைவூட்டி, தேசிய கீதம் பாடப்படுவதற்கு அல்லது இசைக்கப்படுவதற்கு முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அது திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.
கவர்னர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அல்லது இசைக்கப்படாமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால் அதிர்ச்சியடைந்த கவர்னர், அவையை விட்டு வெளியேறினார். தமிழரின் பெருமையை நிலைநிறுத்துவதுடன் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய கீதத்துக்கான மரியாதையை மீட்டெடுப்பதற்கும் கவர்னர் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.