சி.பி.ஐ. விசாரணை: எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
|கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கள்ளகுறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கும் எடப்பாடி பழனிசாமி, தன் மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்ப்பது ஏன்..? தன்மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று தடை வாங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடைசி காலத்தில் வாழ்ந்த கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளையும்தான் சட்ட ஒழுங்கு பிரச்னை. தனிப்பட்ட விவகாரம் தொடர்பான கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டார், எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள்
அ.தி.மு.க. ஆட்சியில்தான் அதிக ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். சென்னை ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு குற்றங்கள் குறைந்துள்ளன. தனிப்பட்ட காரணங்களுக்கான கொலைகளை வைத்து சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என சொல்ல முடியாது.
2022-23இல் தமிழ்நாட்டில் 1,500 கொலைகள் நடந்துள்ளன, இது அ.தி.மு.க. ஆட்சியை விட குறைவு. ஆம்ஸ்ட்ராங் கொலையை பெரிதுபடுத்திய எதிர்க்கட்சிகளுக்கு விக்கிரவாண்டி தேர்தல் முடிவே பதில்" என்று அவர் கூறினார்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சி.பி.ஐ. விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அ.தி.மு.க. நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் தி.மு.க. அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது. சி.பி.ஐ. விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்" என்று அதில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.