மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
|மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வேலூர், கோவை, சேலம் மற்றும் மதுரையில் பெண்களுக்கான சிறப்பு சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகளிர் சிறப்பு சிறைகளின் கண்காணிப்பாளர்களாக ஆண் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், பெண் கைதிகளால் தங்கள் குறைகளை சொல்ல முடியாத நிலை உள்ளதாகவும், மகளிர் சிறப்பு சிறைகளின் கண்காணிப்பாளர்களாக பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் சிறைகளில் உள்ள காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், வேலூர் மகளிர் சிறையில் மட்டுமே ஆண் அதிகாரி உள்ளார் எனவும், அந்த சிறைக்கும் விரைவில் பெண் அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் விளக்கமளித்தார். இதையடுத்து இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிறைத்துறை டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.