
எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முண்ணனி சார்பில், கடந்த 4-ந்தேதி, அறவழிப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார். மேலும், இந்து முன்னணியின் போராட்டத்திற்கு காவல்துறையும் அனுமதி மறுத்தது. அன்றைய தினம் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு நிபந்தனைகளை விதித்து பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி அளித்தனர். பின்னர் மாலை 5 முதல் 6 மணி பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பா.ஜனதா மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இருபிரிவினரிடையே மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறி மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.