
filepic
பிளஸ்-1 மாணவருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் மீது வழக்கு

இளம்பெண்ணும், மாணவனும் ஈரோட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
ஈரோடு,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் பிளஸ்-1 வரை படித்து விட்டு, 'கேட்டரிங் சர்வீஸ்' வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமேடை அலங்காரத்திற்காக ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கும், சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி 2 பேரும் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இருவரும் மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இளம்பெண்ணும், சிறுவனும் ஈரோட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் 17 வயது சிறுவனை, இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் நடத்திய விசாரணையின்போது உண்மை நிலை தெரியவந்தது. எனவே இது குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.