தீபாவளி பண்டிகை: கோவையில் நள்ளிரவு 1 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி
|தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் நள்ளிரவு 1 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை,
தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் நள்ளிரவு 1 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் மற்றும் வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
நெரிசலை தவிர்ப்பதற்கும் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு இரவில் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்வதற்கு வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்படி கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத்தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1.00 மணி வரை செயல்படத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் மேற்படி கூடுதல் நேரத்தை பயன்படுத்தி வியாபாரத்தளங்களுக்கு வருகை புரிந்து, தேவையான பொருட்களை சிரமமின்றி வாங்கிச்செல்லத் தேவையான வகையில் போதிய பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.