< Back
மாநில செய்திகள்
புயல் கரையை கடக்கும்போது சென்னையில் பேருந்து சேவை தற்காலிக நிறுத்தம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

புயல் கரையை கடக்கும்போது சென்னையில் பேருந்து சேவை தற்காலிக நிறுத்தம்

தினத்தந்தி
|
30 Nov 2024 7:41 AM IST

புயல் கரையை கடக்கும்போது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று (30.11.2024) அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். பெஞ்சல் (FENGAL) புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்