< Back
மாநில செய்திகள்
வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
மாநில செய்திகள்

வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தினத்தந்தி
|
30 Oct 2024 12:07 PM IST

முத்துராமலிங்கத் தேவரை போற்றக்கூடிய செயல்களையும் திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் இன்று காலை 7 மணி அளவில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அரசின் சார்பில் கலந்து கொண்டு அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் தி.மு.க. அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மதுரையில் தேவர் சிலை மற்றும் பல இடங்களில் கல்லூரிகளை திறந்துள்ளோம். முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை போற்றக்கூடிய செயல்களையும் திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்.

பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று முத்துராமலிங்க தேவர் கம்பீரமாகக் காட்சியளித்தார் என அறிஞர் அண்ணா புகழ்ந்துரைத்தார். வீரராகப் பிறந்தார், வீரராக வாழ்ந்தார், வீரராக மறைந்தார் என முத்துராமலிங்க தேவர் என கலைஞர் குறிப்பிட்டிருந்தார். அத்தகைய தியாகியைப் போற்றக்கூடிய அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருவது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நான் டெல்லிக்குச் செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். மத்திய வெளியுறவுத் துறை மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அவ்வப்போது நான் எழுதியக் கடிதங்களுக்கு மதிப்பளித்து மீனவர்கள் ஓரளவுக்கு விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறோம். இதில் எந்த விதமான கருத்து மாறுபடும் கிடையாது.

கடந்த 2008-ம் ஆண்டு கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்ட பணி கதவணையில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் 9 ஆண்டுகள் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆட்சிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பணி துரிதப்படுத்தப்பட்டு 40 சதவீதம் வரை நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளன. தொடர்ந்து அந்த பணிகளை முடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

தேவர் ஜெயந்தி விழாவில் முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு,பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், டி.ஆர்.பி.ராஜா, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்