நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
|நெல்லையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு பகுதியில் பிரபல கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவ பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவ கண்காணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆணையர் உத்தரவின் பேரில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள அனைத்து தலங்களிலும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வெடிகுண்டு சம்பவம் தொடர்பான தகவல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் நோயாளிகள் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் அவர்களை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையின் பிரபல கண் மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.