'திருவண்ணாமலையில் கம்யூனிஸ்ட் சார்பில் 27-ந்தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்' - முத்தரசன் அறிவிப்பு
|திருவண்ணாமலையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 27-ந்தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கட்சிக் கொடியை ஏற்றி நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைக்கிறார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை டிசம்பர் 26-ந்தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி வரை, ஓராண்டு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார். அண்ணாமலையாரை வேண்டினால் பாவங்கள் கழிந்து புண்ணியம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு வருகிறார் என்று கருதுகிறோம். அதன்படி வரும் 27-ந்தேதி அமித்ஷா திருவண்ணாமலைக்கு வரும்போது, அவரை பதவி விலக வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.