< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது - செல்வப்பெருந்தகை
சென்னை
மாநில செய்திகள்

பா.ஜ.க. அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது - செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
16 Feb 2025 8:56 PM IST

பா.ஜ.க. அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க. அரசின் வேஷத்தை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற மோடி ஆட்சியில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களை வஞ்சிக்கிற போக்கு தொடர்வதையே இவரது பேச்சு உறுதிப்படுத்துகிறது. அரசமைப்பு சட்டப்படி பல மாநிலங்களின் ஒன்றியத்தைதான் பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார்.

அரசமைப்பு சட்டப்படி மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொது பட்டியல் என மூன்று பிரிவுகளாக அதிகாரங்கள் பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் கல்வியை பொறுத்தவரை பொதுப் பட்டியலில் உள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் மாநில அரசை கலக்காமல் முற்றிலும் புறக்கணித்துவிட்டு பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மத்திய அரசு தொடர்ந்து அபகரித்து வருவது கூட்டாட்சி தத்துவத்தை உதாசீனப்படுத்துகிற செயலாகும்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும், அதில் கூறப்பட்டுள்ள மும்மொழி கொள்கையின்படி நடைபெறுகிற இந்துத்துவாவை புகுத்துகிற பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்கவேண்டும் என்று மத்திய அரசு கூறியதை பலமுறை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 1959-ல் வழங்கப்பட்ட நேரு உறுதிமொழியின் அடிப்படையில் 1968 முதல் தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் புதிய கல்விக்கொள்கையின் மூலமாக மும்மொழி திட்டம் என்ற போர்வையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நேரு உறுதிமொழிக்கு எதிராக இந்தி பேசாத தமிழக மக்கள் மீது திணிக்க மத்திய கல்வித்துறை முயற்சி செய்கிறது.

தர்மேந்திர பிரதான் கூற்றுப்படி சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2024 - 25க்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய கல்வித்துறை வழங்க மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அத்திட்டத்தினால் பயன்பெறுகிற 40 லட்சம் மாணவர்களும், 32 ஆயிரம் ஆசிரியர்களும் ஊதியம் பெற முடியாமல் இருக்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒன்றிய அரசு 60 சதவீதம், மாநில அரசின் பங்கான 40 சதவீதம் நிதி பகிர்வின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய கல்விக்கொள்கையை ஏற்காத ஒரே காரணத்திற்காக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மறுப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது புதிய கல்விக்கொள்கையின் மூலமாக நவோதயா பள்ளி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் மும்மொழி திட்டம் கடைபிடிக்கப்படுவதால் அன்றைய தமிழக அரசு அத்திட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதற்காக அன்றைய மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று கூறாமல் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்க முடியாது என்று கூறுவதற்கு மாநில அரசுக்கு இருக்கிற உரிமையை மறுக்கிற வகையில் பழிவாங்கும் போக்கோடு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பது கூட்டாட்சியை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.

சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் மிகுந்த பொருட்ச்செலவில் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் தமிழுக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி முருகன் கூறியிருக்கிறார். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கிடைத்த ஆதாரத்தின்படி மத்திய சமஸ்கிரத பல்கலைக்கழகத்திற்கு 2017 முதல் 2022 வரை ரூ.1,074 கோடி சமஸ்கிரத மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே காலத்திற்கு முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு மத்திய பா.ஜ.க. அரசு 2017 முதல் 2022 வரை ரூ. 22.94 கோடிதான் ஒதுக்கப்பட்டது.

அதேபோல் தமிழ், கன்னடம் ஆகிய தென்னக மொழிகளுக்கு தலா ரூ. 3 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேசிய மொழிகளாக அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள 22 மொழிகளை சமமாக கருதாமல் 18400 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிரத மொழிக்கு ஒன்றிய அரசு நிதியை வாரி வழங்கிவிட்டு, 8 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழிக்கு சொற்பமான நிதியை வழங்கிவிட்டு மத்திய அரசு காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்துவதை விட ஒரு கபட நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசின் வேஷத்தை கண்டு தமிழக மக்கள் என்றைக்கும் ஏமாற மாட்டார்கள். அனைத்து மாநிலங்களையும் சமமாக கருத வேண்டிய மத்திய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதியாகும். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சாவாலாகும். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்