பா.ஜ.க. அரசின் பொருளாதார கொள்கைகள் ஏழை, எளியவர்களுக்கு ஆதரவாக இல்லை - செல்வப்பெருந்தகை
|அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய அரசமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையின் மூலம் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வரைவுக் குழு தலைவராக இருந்து நாட்டுக்கு அர்ப்பணித்து 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த விழாவின் மூலம் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பை சொந்தம் கொண்டாட பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.வின் பிரதமராகத்தான் மோடி செயல்பட்டு வருகிறார். கடந்தகால வரலாறுகளை மூடிமறைத்து விட்டு அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த தகுதியும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை, இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சி குடியரசு என பறைசாற்றுகிறது. இதில், சமதர்ம, சமய சார்பற்ற என்ற இரு சொற்களையும் முகப்புரையிலிருந்து நீக்க வேண்டுமென்பதுதான் பா.ஜ.க.வின் நீண்டகால நோக்கமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 36 முதல் 51 வரை அரசின் கொள்கையை வழி நடத்தும் நெறிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. முகப்புரையில் கூறப்பட்டுள்ள சமத்துவத்தை மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்திலும் பின்பற்ற வேண்டுமென இதில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், மத்திய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக சமூகத்தில் பொருளாதார ரீதியாக சமநிலையற்ற தன்மையும், ஏற்றத்தாழ்வும் கடுமையாக அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி, இந்திய பொருளாதாரத்தை தீவிரமாக ஆய்வு செய்து மக்களிடையே நிலவுகிற சமத்துவமின்மையை ஆதாரப்பூர்வமாக சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டார். இதன்படி, உயர் வருமானத்தில் உள்ள 1 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 22 சதவீத வருமானத்தை பெற்று வருகின்றனர். இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வை விட அதிகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு விரோதமாக இந்தியாவின் 90 சதவீத சொத்துகள் உயர் சாதியினரிடம் குவிந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அந்த அறிக்கை வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. பின்தங்கிய சமுதாயத்தினர் 10 சதவீதமும், பட்டியலினத்தவர்கள் 2.6 சதவீதமும் இருப்பதாக அந்த அறிக்கை உறுதி செய்கிறது. கடந்த 2014 முதல் 2022 வரை கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில் பின்தங்கிய சமுதாயத்தினரின் பங்களிப்பு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்ததோடு, உயர் சாதியினரின் பங்களிப்பு 80 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், ஆக்ஸ்பார்ம் நிறுவன ஆய்வறிக்கையின்படி 2000-ம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 2023-ல் 119 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை கணித்த பொருளாதார ஆய்வு நிறுவனம் குறைந்தபட்ச ஊதியம் பெறுகிற தொழிலாளர்கள் கார்ப்பரேட்டுகளின் சொத்து குவிப்பு நிலையை அடைவதற்கு 941 ஆண்டுகள் ஆகும் என்று மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறது. இதைவிட இந்தியாவிற்கு வெட்கக் கேடானது என்ன இருக்க முடியும் ? பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மோடி ஆட்சியில்தான் இந்த அவலநிலை உள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகள் சொத்து குவிப்பதற்குத்தான் உதவியாக இருக்கிறதே தவிர, ஏழை, எளியவர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதைத் தான் பொருளாதார ஆய்வறிக்கைகள் உறுதி செய்கின்றன. கார்ப்பரேட் வரி 30 சதவீதமாக இருந்தது, 2019-ல் 25 சதவீதமாகவும், பிறகு 22 சதவீதமாகவும் குறைக்கப்பட்டதால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி செலுத்துவதில் கிடைத்த சேமிப்பு ரூபாய் 3 லட்சம் கோடி. கார்ப்பரேட்டுகளின் லாபம் 32.5 சதவீதமாக உயர்கிற நிலையில், அவர்கள் செலுத்துகிற வரி 18.6 சதவீதமாகத்தான் உயர்கிறது. மேலும், கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட வரிச் சலுகை 2023 நிலவரப்படி, ரூபாய் 8.22 லட்சம் கோடி என ஆதாரப்பூர்வமான தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பீடுகளுக்கு மோடி ஆட்சிதான் காரணமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழாவை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்தி, அரசமைப்புச் சட்டத்தின் புத்தகத்தை பயபக்தியோடு கும்பிடுகிற மோடியின் ஆட்சியில் பயன் அடைந்தவர்கள் யார் என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதானி, அம்பானி உள்ளிட்ட ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்திருப்பதை சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. எனவே, மோடி ஆட்சி அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள நோக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என குற்றம்சாட்ட விரும்புகிறேன்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கூறி வருகிற குற்றச்சாட்டுகளை ஆக்ஸ்பார்ம் அறிக்கை, பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி அறிக்கைகள் உறுதி செய்திருக்கின்றன. ஆகவே, 144 கோடி மக்களை ஏமாற்றுகிற மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து போராடுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.