சட்டசபையில் இருந்து பா.ஜ.க., காங்கிரஸ் வெளிநடப்பு
|சட்டசபையில் இருந்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். அந்த வகையில், இன்று கூடிய சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், "சட்டசபைக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் உள்ளார். தமிழக மக்களுகு எதிராகவே அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்" என்று கூறினார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.