< Back
மாநில செய்திகள்
பாரதம் என்பது தர்மத்தின் அடிப்படையிலானது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மாநில செய்திகள்

பாரதம் என்பது தர்மத்தின் அடிப்படையிலானது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தினத்தந்தி
|
16 Nov 2024 2:03 PM IST

பாரதம் என்பது இந்தியாவை விட பழமையானது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர், கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோர் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த 2 நாட்கள் அறிவுசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் வெவ்வேறு இடத்தில் இவர்கள் பிறந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்திய இலக்கியங்களை எந்த மொழியில் படித்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கும். எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும் என்பது கோடிட்டு காட்டப்பட்டிருக்கும்.

இன்றைய கல்வி முறையில் நாம் பாரதம் என்றால் என்ன என்று நம் குழந்தைகளுக்கு சொல்வது இல்லை. இந்தியாவைதான் சொல்லி தருகிறோம். பாரதம் என்பது இந்தியாவை விட பெரியது. பாரதம் என்பது பொலிட்டிகள் ஸ்டேட் அல்ல. ஐரோப்பிய வகைப்படுத்துதலே பொலிட்டிகள் ஸ்டேட். பாரதம் அதை விட பெரியது. பாரதம் இந்தியாவை விட பழமையானது.

ஒரு மரத்தின் இரு இலைகள் ஒன்று போல் இருப்பது இல்லை. ஆனால் அது வேறு வேறானவை அல்ல. அது போல பாரதம் என்பது பிரிக்க முடியாதது. பாரதம் என்பது மதத்தின் அடிப்படையிலானது இல்லை. தர்மத்தின் அடிப்படையிலானது. மதங்கள் அனைத்தும் சமம் என சொல்வது அரசியல் வாதம். ஒவ்வொரு மதங்களும் வெவ்வேறு கூறுகள் கொண்டவை. தர்மம் தான் அனைத்தையும் இணைப்பது.

பாரதம் என்றால் சாதி, மதம் இல்லை. பாரதம் என்பது தார்மீக தர்ம நாடு. நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்பதே பாரதம். இந்த ஒற்றுமையை இந்த மூன்று புலவர்களும் சொல்லி உள்ளதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்