உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை - விழா ஏற்பாட்டு குழுவினர் விளக்கம்
|17-வது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த உணவுத் திருவிழா வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளைக் கொண்ட 35 அரங்குகள் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிடக் கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவு புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை என்று விழா ஏற்பாட்டு குழுவினரான நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் விளக்கமளித்துள்ளது. 17-வது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.