தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல்
|பதப்படுத்தப்பட்ட 160 கிலோ கடல் அட்டையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
தூத்துக்குடி,
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரையில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற ஒரு லோடு ஆட்டோவில் ஏராளமான பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக போலீசார் அந்த லோடு ஆட்டோவை சுற்றி வளைத்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
தொடர்ந்து போலீசார் லோடு ஆட்டோவில் சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 37 பண்டல்களில் மொத்தம் சுமார் 1,500 கிலோ பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது.மேலும் அந்த லோடு ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பதப்படுத்தப்பட்ட 160 கிலோ கடல் அட்டையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு ரூ.40 லட்சம் என்று கூறப்படுகிறது. விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் தயார் நிலையில் வைத்து இருந்தது தெரியவந்தது.