மோசமான வானிலை: சென்னையில் வானில் வட்டமடிக்கும் விமானங்கள்
|சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் விமானங்கள் வட்டமடித்து வருகின்றன.
சென்னை,
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் விமானங்கள் வட்டமடித்து வருகின்றன. கொல்கத்தா, மும்பை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பல இடங்களில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்து வருகின்றன.