திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி: இந்து முன்னணியினர் கைது
|திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்து முன்னணி சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் கிஷோர், மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் மயிலாட்டம் ஒயிலாட்டங்களுடன் பால்குடங்கள், காவடிகள், முளைப்பாரி எடுத்து ஏராளமான பெண்கள், இளைஞர்கள் ஊர்வலமாக வந்தனர்.
16 கால் மண்டபம் வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் 16 கால் மண்டபம் வளாகத்தில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 16 கால் மண்டபம் வளாகம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து ஜோதி ஏந்தியபடி மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியபடி தடை மீறி மலையை நோக்கி புறப்பட தயாரானார்கள். உடனே அங்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து 300 பேரை கைது செய்தனர். இதையொட்டி மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.