சிறுவன் மீது தாக்குதல்: உறவினர்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம்
|நெல்லை அருகே சிறுவனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை அருகே மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் நெல்லை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று மாலையில் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென்று சிறுவனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. அவர்கள் சிறுவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பீர் பாட்டிலாலும் தாக்கி கொலை செய்ய முயன்றனர். வீட்டில் உள்ள பொருட்களையும் உடைத்து சூறையாடினர். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி சென்றது. பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து சிறுவனை வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த சூழலில் சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுவனை அரிவாளால் தாக்கிய சம்பவத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சாதி ரீதியாக திட்டுதல், அவதூறு வார்த்தைகள் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி நெல்லை எஸ்.பி. சிலம்பரசனிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.