உடலை வருத்திக் கொண்டு ஒரு விஷயத்தை வேண்டினால் பலன் கிடைக்கும் - அண்ணாமலை
|தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தவே பாஜக போராடுகிறது என்று அண்ணாமலை கூறினார்.
கோவை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து பாஜக தலைவர் அண்ணாமலை 'போராட்டம் நடத்தினார். மேல் சட்டை அணியாமல், பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை நடத்தினார்.
அதன்பின்னர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக ஆட்சியில் பல்வேறு சம்பவங்கள் தவறாக நடைபெறுகின்றன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அறவழியில் கூட போராட முடியவில்லை. காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காக்கி உடையின் மீதுதான் என் கோபம். காவல்துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்தி அடைந்ததாக எப்படி கூற முடியும்?. காவல் ஆணையர் அவ்வாறு கூறியது தவறு.
உடலை வருத்திக் கொண்டு ஒரு விஷயத்தை வேண்டினால் பலன் கிடைக்கும். பாஜகவின் போராட்டம் வருகின்ற காலத்தில் இன்னும் தீவிரமாகும். தமிழ் மண்ணின் மரபுப்படி பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் யாரும் இது மாதிரி செய்ய மாட்டார்கள். பாஜக தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும். வெற்றி தோல்வியை தாண்டி தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தவே பாஜக போராடுகிறது.
லண்டன் பயணத்திற்கு பிறகு என் பாதை தெளிவாக ஆரம்பித்துள்ளது. லண்டன் பயணத்திற்கு பிறகு, எனக்கு அரசியலில் நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது. அனைத்து மேடைகளிலும் திமுகவை தோலுரித்து காட்ட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.