பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது: அமைச்சர் ரகுபதி
|திமுகவின் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவின்அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் திமுகவின் நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. யார் வேண்டுமானாலும் வந்து புகைப்படம் எடுத்து கொள்ளலாம்; அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது. கைதான ஞானசேகருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாலியல் வன்கொடுமை வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கோ, முதல்-அமைச்சருக்கோ கிடையாது. வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றவாளியை காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை; குற்றவாளிக்கு உரிய தண்டனை நிச்சயமாக பெற்றுத் தரப்படும்.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமென்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவு என்கிறது மத்திய அரசு தரவுகள். பெண்களுக்கு உதவும் வகையில் திமுக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வரலாம்.
ராமேசுவரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரத்தில் கைதானவர் அதிமுக பிரமுகரின் மகன். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கை எப்படி நடத்தினர் என்பது எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.வில் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவங்களை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை; வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை. விவரங்கள் வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண் எப்படி தைரியமாக புகார் அளித்திருப்பார். பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.