சென்னையில் மது போதையில் தகராறு: கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் கைது
|சென்னை எழும்பூரில் மது போதையில் தகராறு செய்த கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை எழும்பூர் லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு மது போதையில் வந்த மூன்று கென்யா நாட்டுப் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சாலையில் சென்ற பொது மக்களுக்கும் தொந்தரவு கொடுக்கும் வகையில் அந்த பெண்கள் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு வந்த எழும்பூர் போலீசார், மதுபோதையில் இருந்த மூன்று பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் விசாரணையில், மது போதையில் தகராறில் ஈடுபட்ட பெண்கள் கென்யா நாட்டை சேர்ந்த விஜினியா, அனஸ்தடியா, போசியா மூவண்டை ஆகியோர் என்பதும், இவர்கள் மருத்துவ காரணத்திற்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக தமிழ்நாட்டிற்கு வந்து தி.நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கியிருப்பதும், ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
நேற்று ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு பாரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் எழும்பூரில் உள்ள பாருக்கு வந்து உள்ளே அனுமதிக்குமாறு கூறி சுமார் 2 மணி நேரமாக பிரச்சனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து எழும்பூர் போலீசார், மூன்று பெண்கள் மீதும் ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.