அமரன் திரைப்படத்திற்கு பாராட்டு: தம்பி அண்ணாமலைக்கு நன்றி - கமல்ஹாசன் பதிவு
|பல முக்கிய அம்சங்களில் இது மிக முக்கியமான படம் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தீபாவளியை ஒட்டி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை பார்த்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ்தள பக்கத்தில், "'அமரன்' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல முக்கிய அம்சங்களில் இது மிக முக்கியமான படம். படத்தில், எனது காக்கி சீருடையை அணிந்து கொண்டிருந்த அந்த நாட்களை நான் நினைவுகூரும் தருணத்தில், 2014-ம் ஆண்டு நாட்டின் பாதுகாப்புக்காக உள்நோக்கிய சுதந்திரம் கொண்டிருந்தபோது நாம் இழந்த உணர்வையும் உணர வைத்தார்.
அந்த உணர்வுகளை, அந்த பெருமையுடன் வலிமையுடன் தாங்கும் அவர்களின் குடும்பங்கள் எப்போதும் நம் மனங்களில் இருக்கும். ராஜ்குமார் பெரியசாமி அவர்களின் அருமையான இயக்கம், சிவகார்த்திகேயன் அவர்களின் அதிசயமான நடிப்பு, அவருடைய நடிப்பில் இது மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது, சாய்பல்லவி அவர்களின் வேடமும் மாறுபட்டது, மனதை உற்று கொள்ளும் இசையும், உணர்ச்சிமிகு காட்சியையும் தரும் ஒளிப்பதிவு. இந்த படத்தை உருவாக்கியதற்காக கமல்ஹாசன் அவர்களுக்கு சிறப்பு நன்றி. இந்திய ஆயுதப்படை வாழ்க! நீங்கள் தான் சிறந்தவர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதளத்தில், "அமரன் திரைப்படத்தை பார்த்து, குழுவைப் பாராட்டியதற்கு அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அமரன் படத்தின் தயாரிப்பாளரும், ம.நீ.ம. கட்சித்தலைவருமான கமல்ஹாசன் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழக பாஜக தலைவர், தம்பி அண்ணாமலை அவர்கள் அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி" என்று அதில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.