< Back
மாநில செய்திகள்
தவெகவில் விரைவில் மாவட்ட செயலாளர்கள் நியமனம்?
மாநில செய்திகள்

தவெகவில் விரைவில் மாவட்ட செயலாளர்கள் நியமனம்?

தினத்தந்தி
|
3 Jan 2025 5:25 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் முதலாம் ஆண்டு நிறைவுக்கு (பிப்ரவரி 2-ம் தேதி) முன்னதாக மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலப் பணிகளை தீவிரப்படுத்தவும் கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்