< Back
மாநில செய்திகள்
கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தினத்தந்தி
|
5 Dec 2024 3:24 PM IST

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பதில் தி.மு.க. அரசுக்கு என்ன பயம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்தி, முடக்க நினைத்தே இந்த மேல்முறையீட்டை தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ளது.

சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிப்பதில் தி.மு.க. அரசுக்கு என்ன பயம்? கள்ளச்சாராய மரணங்களுக்கு ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணமாக இருக்க, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இதனை விசாரிப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? சுப்ரீம் கோர்ட்டில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி, மரணித்த 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அ.தி.மு.க. தொடர்ந்து போராடும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்