டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணி - 5 ஆயிரம் பேர் மீது வழக்கு
|டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை ,
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி நடை பயண பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர்.
மேலூர், அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள், வணிகர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்து திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் , டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.