தமிழர் விரோதச் செயல்களை பா.ஜ.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - கனிமொழி
|யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
பொங்கல் பண்டிகையன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். பா.ஜ.க. அரசு உடனடியாக தமிழர் விரோதச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் (ஜன 15,16) நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) - பேராசிரியர் தகுதித் தேர்வு (NET) நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
சமீபத்தில்தான், தேசிய அளவிலான CA தேர்வுகளின் தேதியை மாற்றக் கோரி எதிர்க்குரல் எழுப்பி அது மாற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே நாளில் வேறொரு தேசியத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டின் பண்பாடு - கலாச்சாரம் - உணர்வுகள் என எதையும் மதிக்காமல், மத்திய ஆதிக்கத்தைத் திணித்து வரும் பா.ஜ.க. அரசு உடனடியாக அதன் தமிழர் விரோதச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.