தூத்துக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
|சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்து உள்ளது. இங்குள்ள கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அவர்கள் உள்ளே சென்றதும் அந்த அலுவலக கதவுகளை பூட்டினர். அங்கிருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைவரது செல்போன்களும் பெறப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டன.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அங்கு இருந்த சார்பதிவாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூத்துக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.