< Back
மாநில செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து வெளியான அறிவிப்பு
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து வெளியான அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Dec 2024 11:27 PM IST

வீர வசுந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார்.

சென்னை,

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்லூர் ராஜு, உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடத்தப்படும்? வீரவசந்தராயர் மண்டபம் எப்பொழுது புதுப்பிக்கப்படும்?, அதனுடைய துணை கோவிலான செல்லூர் பகுதியில் இருக்கின்ற ஆப்பனூர் நாதர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடத்தப்படும் என்று துணை கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

வீர வசந்தராயர் மண்டபத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு அப்போது இருந்த அரசால் குழு அமைக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட குழு அந்த மூன்று ஆண்டுகளில் சில பணிகளை மேற்கொண்டு இருந்தாலும், வீர வசந்தராய மண்டபத்திற்கு சுமார் 25 அடி நீளம் கொண்ட கற்தூண்கள் தேவைப்படுகின்றது. அதற்குண்டான கற்கள் ஒரே அளவில் கிடைப்பது சிரமமாக இருந்தது. தற்போது கற்களை எடுப்பதற்குண்டான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இப்பணிக்காக ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டு, அந்த பணிகளும் நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் கண்காணித்து வருகிறார். விரைவில் அதற்குண்டான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும்.

உறுப்பினர் கோரிய கோவில் கும்பாபிஷேக பணியும் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தளவில் சுமார் 63 திருப்பணிகள் அதாவது 40 பணிகள் உபயதாரர்களாலும், 23 திருப்பணிகள் திருக்கோவில் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை விரைந்து முடித்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்தித் தரப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்