அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
|தமிழக மக்கள் அனைவரும் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு முடிவுரை எழுத தயாராகிவிட்டனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அன்புச் சகோதரர் அண்ணாமலை தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் முடிவை கைவிட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை கசியவிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.
குறைந்தபட்ச விதிமுறைகளை கூட பின்பற்ற தவறிய காவல்துறையின் அலட்சியத்தை கண்டிக்கும் விதமாகவும், மக்கள் நலனையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறி, திசைமாறிப் போன தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சகோதரர் அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு, தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என சபதம் மேற்கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு நாள்தோறும் பல்வேறு விதமான இன்னல்களுக்கு உள்ளாகும் ஒவ்வொரு பொதுமக்களின் ஆதங்கம் தான் சகோதரர் அண்ணாமலையின் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் வெளிப்பாடு என்பதை அறிந்திருக்கும் தமிழக மக்கள் அனைவரும் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு முடிவுரை எழுத தயாராகிவிட்டனர்.
தி.மு.க.வில் இருப்பதால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார்களா? அல்லது குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதற்காகவே தி.மு.க.வில் இருக்கின்றார்களா? என கேட்கும் அளவிற்கும் தி.மு.க.வினருக்கு தொடர்பில்லாத குற்றச்சம்பவங்களே நடக்க முடியாது என்ற அவல நிலைதான் தமிழகத்தில் இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
மக்களை தினந்தோறும் துன்பத்திற்குள்ளாக்கும் தி.மு.க. அரசும் அதன் முதல்வரும்தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு வெட்கித் தலை குனிய வேண்டுமே தவிர, மக்கள் பக்கம் நின்று, மக்களுக்காகவே தொடர்ந்து போராடி வரும் நாம், நம்மை நாமே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதே எனது நிலைப்பாடு.
ஆகவே, தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் முடிவை சகோதரர் அண்ணாமலை கைவிடுவதோடு, மக்கள் விரோத தி.மு.க. அரசை ஆட்சியிலிருந்து அடியோடு துடைத்தெறிந்திட மக்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை தொடர்ந்து தீவிரப்படுத்திடுவோம் என இந்நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.