< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர்: எஸ்.வி.சேகர் பேட்டி
மாநில செய்திகள்

அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர்: எஸ்.வி.சேகர் பேட்டி

தினத்தந்தி
|
6 Nov 2024 2:52 PM IST

நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

சென்னை,

சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எந்தக் கட்சி பிராமணர்களுக்கு சீட் கொடுக்கிறார்களோ, ஈ.டபிள்யூ.எஸ். (EWS) கொண்டு வருகிறார்களோ, பிராமணர் நல வாரியம் ஆரம்பிப்பதாக அறிவிக்கிறார்களோ அது திமுகவாக இருந்தாலும் நான் திமுகவிற்காக பரப்புரை செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன்; நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் சமூகத்திற்காக பேசுகிறேன். எந்தவொரு காரணத்தையும் வைத்து அடுத்த சமூகத்தையோ, மதத்தையோ குறைத்து பேசுவது, அயோக்கியத்தனமான செயல்.

அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் நாற்பதற்கு பூஜ்ஜியம்தான் எடுக்க முடியும்; அண்ணாமலை பாஜக மாநில தலைவராவதற்கு தகுதியில்லை என கூறினார்கள், ஆனால் அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர்; தற்போது படிக்க சென்றுள்ளார், ஆனால் அறிக்கை மட்டும் வெளியிடுகிறார். தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். பாஜகவில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை தான் நடக்கிறது.

பொதுவெளியில் பேசும்போது என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என தெரிந்து கொண்டு போக வேண்டும். நடிகை கஸ்தூரி பேசியது கண்டிக்கத்தக்க செயல். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொல்வது தவறு.

விஜய் தற்போது தான் அரசியல் களத்திற்கு வந்துள்ளார்; இனி வரும் நாட்களில் விஜய் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து தான் அவரது அரசியல் எதிர்காலம் அமையும்; விஜய்.. விஜய் என யார் பேசுகிறார்களோ அவர்கள் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள் என அர்த்தம்; நாதக தொண்டர்கள் தவெகவிற்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் போட்டி என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான்; விஜய்யின் வயதிற்கு இன்னும் 6,7 தேர்தல்களை சந்திக்கலாம்; விஜய் மாநாட்டிற்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாற வாய்ப்பில்லை. தாக்கம் என்பது வேறு; ஆட்சி பிடிப்பது என்பது வேறு.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்