பஞ்சால் ஆன சாட்டையை வைத்து அடித்துக் கொண்ட அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
|பஞ்சால் ஆன சாட்டையை வைத்து அண்ணாமலை அடித்துக் கொண்டார் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு தானே சாட்டையால் அடித்து நேற்று நூதன போராட்டம் நடத்தினார். அண்ணாமலை நடத்திய இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கிண்டல் செய்தனர். இந்த நிலையில், அண்ணாமலை சாட்டையடி குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேங்காய் நார் அல்லது தோலினாலோ ஆன சாட்டையில் அடித்துக் கொள்ளவில்லை. மாறாக பருத்தி பஞ்சினால் தயாரிக்கப்பட்ட சாட்டையினை கொண்டு அடித்துக் கொண்டுள்ளார். பஞ்சால் ஆன சாட்டையால் அடித்துக் கொண்ட விவகாரம் என்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செய்த ஒன்றுதான். அண்ணாமலை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இனி எப்போதும் அவர் நிச்சயமாக காலில் செருப்பு அணிய முடியாது. ஏனெனில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.