அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - பதிவாளர் உத்தரவு
|அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரம் லேக் வியூ ஏரி பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ரவுடியான இவர் மீது திருட்டு, கொள்ளை உள்பட 20 வழக்குகள் உள்ளன. இவருடைய காம வேட்டையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவி இவரது மிரட்டலுக்கு அடிபணியாமல் துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்ததால் ஞானசேகரன் கொட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மேலும் இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அதன்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் எஸ்.பிருந்தா ஆகிய 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக சேர்க்கப்பட்ட போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பல்கலை. பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட வேண்டும். ஆன்லைன் நிறுவன டெலிவரி ஊழியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழக நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நேரத்திற்குப் பிறகு வளாகத்தில் தங்குவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாலியல் சீண்டல்களுக்கு எதிராக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ இயங்கும் கல்லூரிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.