அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு; டிஜிபி விளக்கம்
|வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சென்னை,
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக எஸ்ஐடி குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக ஆதாரமற்ற தகவல் பரவிவருகிறது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் அடங்கிய சாதனங்கள் பறிமுதல் எனவும் தவறான தகவல் பரவி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.