அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்பு
|அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடந்து வருகிறது.
சென்னை,
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 3-வது நாள் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முன்னதாக இந்த விவகாரத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அதன் மீது சட்டசபையில் தற்போது விவாதம் நடந்து வருகிறது. கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் பேசி வருகின்றனர். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உள்ளார்.