< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
2 Dec 2024 3:50 PM IST

திண்டிவனத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம்,

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், பிரம்மதேசம், வானூர், கிளியனூர், கோட்டக்குப்பம், செஞ்சி, விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், மயிலம் உள்ளிட்ட பகுதிகளிலும், நூற்றுக்கணக்கான கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். மழையால் பாதிக்கப்பட்ட 1,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புயல் மழையால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் புதிய பேருந்து நிலையம், எம்ஜிஆர் நகர், காந்திநகர், நாகலாபுரம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

திண்டிவனத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை வேகபடுத்த வேண்டும். சென்னையில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் தமிழக அரசு அங்கு தான் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 50 செ.மீ.க்கும் மேலாக மழை பெய்துள்ளது.

குழந்தைகளுக்கு பால், மக்களுக்கு குடிநீர், உணவு பொருட்கள் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெற்பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஏக்கருக்கு ரூபாய் 40,000 வழங்க வேண்டும். வாழை போன்ற விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஒரு லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்