விஜய் மாநாட்டுக்கு சென்ற மூதாட்டி லாரி மோதி பலி
|மாநாட்டிற்கு சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சேலம்,
விஜய் மாநாட்டிற்கு சென்று திரும்பிய போது லாரி மோதி காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 74). மூதாட்டி அந்த பகுதியை சேர்ந்த பலருடன் நேற்று முன்தினம் நடந்த விஜய் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார். மாநாடு முடிந்ததும் அனைவரும் ஆம்னி பஸ்சில் வந்தனர்.
வழியில் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள திருநாவலூர் பகுதியில் ஆம்னி பஸ்சை நிறுத்தி விட்டு அனைவரும் டீ குடித்தனர். அப்போது மூதாட்டி இயற்கை உபாதையை கழிப்பதற்காக சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதி உள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உளுந்தூர் ேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று காலை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மூதாட்டியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் மாநாட்டிற்கு சென்று திரும்பிய போது விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.