நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம் - கமல்ஹாசன் பதிவு
|எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்தக் கூடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்துக்கு நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அப்போது அம்பேத்கர் பெயரை தொடர்ந்து கூறுவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சித்தார். அதாவது, 'அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்றார்.
அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் புயலை கிளப்பின.
இந்த நிலையில் அம்பேத்கரை விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார். அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.
நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75-ம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.