ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு - விஜய்
|2026-ம் ஆண்டு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு என்று விஜய் கூறியுள்ளார்.
விழுப்புரம்,
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியதாவது:-
தமிழக மக்களின் ஆசீர்வாதத்தாலும், அமோக ஆதரவாலும் நாம் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம் என்ற அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கை நூறு சதவீதம் இருக்கிறது. அந்த நிலையை நாம் நிறைவாக அடைந்தாலும், நம்மை நம்பி நம்முடன் சிலர் வரலாம், அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருபவர்களை நாம் அன்போடு அரவணைக்க வேண்டும். நமக்கு எப்பொழுதுமே நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம்.
அதனால் நம்மை நம்பி நம்முடன் களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து, அதிகார பகிர்வு செய்யப்படும். 2026-ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. இவ்வாறு அவர் கூறினார்.