மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
|எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அரசு சமாளிக்கும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
கருணாநிதி நூற்றாண்டு நிறைவினையொட்டி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் 3,500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:-
புயல் ஏதும் உருவாகவில்லை. எச்சரிக்கை விட்டிருக்கின்றார்கள். தென் தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. சென்ற மழையை (சென்ற மாதம்) தமிழ்நாடு அரசு எப்படி சமாளித்ததோ அதேபோன்று எல்லா விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னதாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சில பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்திருந்தோம். சில இடங்களில் தூர்வார தெரிவித்திருந்தோம். கண்டிப்பாக, எவ்வளவு பெரிய மழை வந்தாலும், நம்முடைய அரசு சமாளிக்கும். மக்கள் அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு கூறினார்.