'சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது' - மாசு கட்டுப்பாட்டு வாரியம்
|சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையில் தீபாவளி தினத்தன்று காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததற்காக சென்னையில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு 554 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தீபாவளியன்று சென்னை வளசரவாக்கத்தில் 287 என்ற அளவில் காற்றின் தரம் மோசமாக இருந்ததாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல் ஒலி மாசு, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 78.7 டெசிபல் என்ற அளவிலும், குறைந்தபட்சமாக பெசன்ட் நகரில் 59.8 டெசிபல் என்ற அளவிலும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.