அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்
|பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. இதில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
சென்னை
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த வகையில் அ.தி.மு.க. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி செயற்குழுவை கூட்டியது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். கூட்டம் தொடங்கியதும் முதலில், அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கும், அரசியல் கட்சி தலைவர்கள் - முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.