< Back
மாநில செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் உதவ வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
மாநில செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் உதவ வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தினத்தந்தி
|
30 Nov 2024 2:56 PM IST

ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அரசு உடனடியாக அகற்ற வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதவ வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், மிக அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடக்கும்போது கழிவு நீர் குழாய் திறப்புகள் மூடியுள்ளனவா என்றும், மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்துள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேசமயம் அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்